Search

Sunday, February 1, 2015

வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்....

 3-2-2015 அன்று வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்.!




வருவார் அழைத்து வாடி வடலூர் வடதிசைக்கே
வந்தால் பெறலாம் நல்ல வரமே !

ஒவ்வொரு வருடமும் தைப்பூசத்தன்று வடலூரில் உள்ள ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையில்'', ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படுகிறது.

வடலூரில் காட்டப்படும் ஜோதி தரிசனம் வித்தியாசமானது

அன்று காலை நேரத்தில் கிழக்கே சூரியன் தோன்றுவதும் ,மேற்கே சந்திரன நிறைவு பெறுவதும் ,மத்தியில் ஜோதி தெரிவதும்,ஒரே நேரத்தில் மூன்று ஜோதியைக் காண்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இதுவே வடலூரின் தைப்பூச ஜோதி தரிசனத்தின் தனிசிறப்பாகும் .

ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படுகிறது.

சத்திய ஞானசபை என்னுள் கண்டனன்
சன்மார்க்க சித்தியை நான் பெற்றுக் கொண்டனன் !

திருந்தும் உள்ளத் திருக்கோயில் ஞான
சித்திபுரம் எனச் சத்தியம் கண்டேன் !

நம் வள்ளல்பெருமான் அருட்பெருஞ்ஜோதி என்னும் உண்மைக் கடவுளைக்  கண்டு அனுபவித்து மக்களுக்கு காட்டுவதற்காகவே ஜோதி தரிசனம் காட்டப்படுகின்றது.

நம் வள்ளல்பெருமான் இந்த மாயா மறைப்புத் திரைகளாகிய தத்துவ படலங்களை பற்றி அருட்பெருஞ்ஜோதி அகவலில் மிகவும் தெளிவாக விளக்கி உள்ளார் .

கரைவின் மாமாயைக் கரும் பெருந் திரையால்
அரைசது மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !

பேருறு நீலப் பெருந்திரை அதனால்
ஆருயிர் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !

பச்சைத் திரையால் பரவெளி அதனை
அச்சற மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !

செம்மைத் திரையால் சித்துறு வெளியை
அம்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !

பொன்மைத் திரையால் பொருளுறு வெளியை
அண்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !

வெண்மைத் திரையால் மெய்ப்பதி வெளியை
அண்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !

கலப்புத் திரையால் கருதனு பவங்களை
அலப்புற மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !

மேலே கண்ட ஏழு திரைகள் மனித ஆன்மாவை மறைத்துக் கொண்டுள்ளன. .அதை விளக்கும் வகையில் வடலூரில் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் கட்டப்படுகின்றது ,முதலில் நமக்குத் தெரிவது கறுப்புத்திரை ,அதற்குப்பின் நீலத்திரை ,அதன்பின் பச்சைத்திரை ,அதன்பின் சிவப்புத்திரை,அதன்பின் பொன்மைத் திரை ,அதன்பின் வெண்மைத் திரை,அதன்பின் இறுதியாக கலப்புத்திரை,இவ் ஏழு திரைகளையும் ஒவ்வொன்றாக நீக்கித் திரை மறைப்பை எல்லாம் நீக்கியபின் திரைக்குப் பின்னர் பிரதிட்டை செய்யப் பெற்றுள்ள கண்ணாடியில் அருட்பெருஞ் ஜோதி தரிசனம் காட்டப்படும் .

அனைத்து உயிர்கள் இடத்தும் ஈரமும், கருணையும், இரக்கமும்,ஆண்டவர் இடத்தில் அன்பும் செலுத்த வேண்டும் என்பதுதான் வள்ளலாரின் வழிபாட்டு முறைகளாகும்,

ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்பது வள்ளலாரின் அழுத்தமான செய்தியாகும்.கடவுள் அன்பும், கருணை உள்ளவர் நாமும் கருணை உள்ளவர்களாக மாறினால்தான் இறைவன் அருளைப் பெறமுடியும்.வேறு எந்த செயல்களாலும் கடவுளின் அருளைப் பெறமுடியாது என்பது வள்ளலாரின் அழுத்தமான கொள்கையின் செய்தியாகும் .

 எல்லா நாட்களையும் விட ''தைப்பூசம்'' என்னும் நாள் அருள் நிறைந்த நாள் என்பதாலும் ,இறைவன், அன்று எல்லா உயிர்களுக்கும் நிறைவான அருள் வழங்கும் நாள் என்பதாலும், இறைவன் உலகை நோக்கி வருகிறார் என்பதாலும் ஜோதி தரிசனம் காட்டப்படுகிறது.

மேலும் முக்கியமானது ,இறைவன் உலகை நோக்கி வருவதால்,அந்த நாள் உயிர்களுக்கு நிறைவான இன்பம் தரும் நாள் என்பதாலும் இயற்கையில் உள்ள கிரகங்கள் யாவும் தன்னுடைய பணிகளை (வேலைகளை ) செய்யாமல் உயிர்களுக்கு நன்மையே செய்யும் என்பதாலும் ஜோதி தரிசனம் காட்டப்படுகிறது அதனால்தான் ''தைபிறந்தால் வழி பிறக்கும்' என்றார்கள் நம் முன்னோர்கள் .

தைப்பூசத் திருநாளில் மனிதர்களாகிய நாம் இறைவனுடைய அருளைப் பெற்று மகிழ்ச்சியான இன்பம் தரும் நாளாகக் கருதி வடலூர் ஜோதி தரிசனம் கண்டு இறைவனுடைய அருளைப் பெற்று ,நீண்ட ஆயுள்,நிறைந்த செல்வம்,அழியாப்புகழ் பெற்று நீடுழி வாழ்வோம்.
 
வருவார் அழைத்து வாடி வடலூர் வடதிசைக்கே
வந்தால் பெறலாம் நல்ல வரமே !.....வள்ளலார்