என்.எல்.சி. நிர்வாகத்தின் தொழிலாளர் போராட்டத்தை நசுக்கும் சட்டவிரோத முயற்சிக்கு கடும் கண்டனம்!!
என்.எல்.சி. நிர்வாகத்தில் 44 நாட்களாக தங்களது அடிப்படை வாழ்வுரிமைக்காக ஒப்பந்த தொழிலாளர்கள் போராடி வரும் நிலையில் அவர்களை மிரட்டும் வகையில் "வெளிமாநில தொழிலாளர்களை நியமித்து பணிகளை மேற்கொள்வோம்" என்று அந்நிறுவனத்தின் மனிதவள பொதுமேலாளர் என்.பாலாஜி தெரிவித்திருப்பது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது தொழிலாளர்களின் போராட்டத்தை நசுக்கி ஒடுக்கிற சட்டவிரோத நடவடிக்கை.
என்.எல்.சி. நிறுவனம் என்பது வானத்தில் இருந்து வந்த குதித்தது அல்ல.. நெய்வேலியைச் சுற்றிய 50க்கும் மேற்பட்ட கிராமங்களின் பூர்வீக நிலத்தில் அவர்களது ஒட்டுமொத்த உழைப்பால் மட்டுமே வந்தது. கடந்த 30 ஆண்டுகாலத்துக்கும் மேலாக இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்காக உழைத்து உழைத்து எந்த ஒரு முன்னேற்றத்தையும் காணாதவர்களே பல்லாயிரக்கணக்கான ஒப்பந்த தொழிலாளர்கள்.
இத்தனை ஆண்டுகாலமாக உழைத்து உழைத்து எந்த பலனையும் அனுபவிக்காத நிலையில்தான் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட அடிப்படையான வாழ்வுரிமைக் கோரிக்கைகளை ஒப்பந்த தொழிலாளர்கள் முன்வைத்து 43 நாட்களாக போராடி வருகின்றனர். கடந்த மாதம் 3-ந் தேதி முதல் ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டும் வருகின்றனர்.
இதுவரையில் மொத்தம் 13 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனால் அனைத்து பேச்சுவார்த்தைகளுமே தோல்வியில்தான் முடிவடைந்துள்ளன.
ஏனெனில் ஒப்பந்த தொழிலாளர்களின் அடிப்படை கோரிக்கையான பணி நிரந்தரம், ஊதிய உயர்வு ஆகியவற்றை என்.எல்.சி. நிர்வாகம் அடியோடு நிராகரித்து வருகிறது. என்.எல்.சி. நிர்வாகத்தின் இந்த அடாவடித்தனமான போக்கினால்தான் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைகின்றன.
இந்த நிலையில்தான் என்.எல்.சி. நிறுவனத்தின் மனித வளபொதுமேலாளர் என். பாலாஜி, "வெளிமாநிலங்களில் இருந்து புதிதாக ஒப்பந்த தொழிலாளர்களை பணி அமர்த்துவோம்" என்று ஈவிரக்கமின்றி அறிவித்துள்ளார்.
என்.எல்.சி. நிறுவனம் என்பது தமிழ்நாட்டின் மக்களின் உழைப்பால் உருவானது. இந்த நிறுவனம் ராஜஸ்தான் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் துணை நிறுவனங்களை ஏற்கெனவே அமைத்திருப்பதே தமிழ் மக்களுக்கு செய்திருக்கிற மாபெரும் துரோகம். எங்கள் வீட்டு சொத்தை எடுத்துக் கொண்டு போய் அடுத்தவன் வீட்டில் வைப்பதை எப்படி அனுமதிக்க முடியும்?
இந்த நிலையில் நியாயமான வாழ்வாதார கோரிக்கைகாகப் போராடுகிற என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களை மிரட்டும் வகையில் என்.எல்.சி. நிர்வாகம் வெளிமாநில தொழிலாளர்களை நியமிப்போம் என்று அறிவித்திருப்பது எதேச்சதிகார ஆணவப் போக்காகும். இது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது சட்டவிரோதமானது. தொழிலாளர்களின் போராட்டத்தை நசுக்கிற, ஒடுக்கிற கொடூரமான நடவடிக்கை. என்.எல்.சி. நிர்வாகத்தின் இந்த சட்டவிரோத போக்கு மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
என்.எல்.சி.யின் இந்த அராஜகப் போக்கை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழ்த் தேசிய, மனித உரிமை இயக்கங்களும் வன்மையாகக் கண்டிக்க வேண்டும். என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைக்காக ஜாதி, மத, கட்சிகளைக் கடந்து ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்.
ஒப்பந்த தொழிலாளர்கள் நியாயமான உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கும் நிலையில் வெளிமாநிலத்தவரை பணிகளில் ஈடுபடுத்தினால் கடுமையான விளைவுகளை என்.எல்.சி. நிர்வாகம் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கிறேன். ஏற்கெனவே மராட்டிய மண்ணில் தங்களது மாநில மக்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் வெளிமாநிலத்தவர் தேர்வு எழுத வந்த போது ஓட ஓட விரட்டியடிக்கப்பட்ட சம்பவத்தை இந்த தருணத்தில் என்.எல்.சி. நிர்வாகத்துக்கு எச்சரிக்கையோடு சுட்டிக்காட்டவும் விரும்புகிறேன்.
என்.எல்.சி. தொழிலாளர்களின் வாழ்வுரிமைக் கோரிக்கைக்கு தீர்வு காண தமிழக அரசு உடனே தலையிட்டு நல்ல தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment